×

திருமண நாளில் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி பாயாசத்தில் தூக்க மருந்தை கலந்து மூதாட்டியிடம் நகை கொள்ளை: 40 சிசிடிவி கேமரா ஆய்வுக்குப்பின் பெண் கைது

சென்னை: திருமண நாளில் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி,  பாயாசத்தில் தூக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராயபுரம் பி.வி.கோயில் தெருவை சேர்ந்த கனகவல்லி (85), தனியாக வசித்து வருகிறார். கடந்த  3ம் தேதி கனகவல்லி ராயபுரம் கல்மண்டபம் அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அங்கு  பத்மாவதி (53) என்பவர் அறிமுகமானார். இவர், மூதாட்டியிடம் அன்பாக பேசியதுடன், வீடு வரை பாதுகாப்பாக கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார். அதேபோல், கடந்த 7ம் தேதி மீண்டும் மூதாட்டி வீட்டுக்கு சென்ற பத்மாவதி, மூதாட்டியை கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.  மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்ட பின், இன்று எனக்கு திருமண நாள், எனக்கூறி மூதாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி உள்ளார். பின்னர், பத்மாவதி தான் கொண்டு வந்த  பாயாசத்தை மூதாட்டிக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, மூதாட்டி அணிந்திருந்த செயின், வளையல் என 4 சவரன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அதே தெருவில் வசிக்கும் தனது மகள் சியாமளாவிடம் கூறியுள்ளார். உடனே, அவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கனகவல்லி வீட்டிலிருந்து அந்த பெண்ணுடன் கோயிலுக்கு  சென்ற வழிநெடுக்கிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பத்மாவதியின் முகம் ஒரு கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. அவர் ஏற்கனவே கொருக்குப்பேட்டை பகுதியில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை திருடி சென்றவர் என்பது தெரிய வந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ராயபுரம் சிமிண்டரி சாலையில் உள்ள காலிங்கராயன் தெருவில் பத்மாவதி வசித்து வருவது தெரியவந்தது.

அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது  செய்தனர். அவரிடம் இருந்து மூதாட்டியின் வளையல், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: பத்மாவதியின் கணவர் உடல்நலம் குன்றியிருப்பதால் தனது நகைகள் எல்லாவற்றையும் அடகு வைத்து, அவருக்கு சிகிச்சையளித்துள்ளார். அந்த நகைகளை மீட்கவும், குடும்பதை நடத்த வருவாய் இல்லாததாலும் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, மூதாட்டிக்கு பாயாசத்தில் தூக்க மருந்து கலந்து கொடுத்து, நகைகளை திருடியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். முதியவர்கள் முகம் தெரியாதவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது. வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூடாது. முதியோர்கள் தாங்கள் தனியாக இருக்கும் பட்சத்தில் இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்தால் அவர்களை போலீசார் கண்காணித்து வருவார்கள்  என போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...